• முகப்பு
  • வரலாறு
    • திருநீலகண்ட நாயனார்
    • 7 கன்னிமார்கள்
    • 24 நாடுகள், இணைநாடுகள்
    • குலதெய்வம்‌ என்றால்‌ என்ன ?
  • பூஜைகள்
  • நிர்வாகம்
  • புகைப்படம்
  • ஆன்மீகம்
  • இருப்பிடம்

திருநீலகண்ட நாயனார் வரலாறு

சிவன் காட்சி


திருநீலகண்ட நாயனார் மனைவியுடன் குளத்தில் மூழ்கியெழும் காட்சி


திருநீலகண்ட நாயனார்
பெயர் : திருநீலகண்ட நாயனார்
பூஜை நாள் : தை விசாகம்
அவதாரத் தலம் : தில்லை
முக்தித் தலம் : தில்லைப்புலீச்சரம்

திருநீலகண்ட நாயனார் துதி


  சீர்‌ பெறுகு தில்லையில்‌ வேட்கோவர்‌ குலமதாய்‌
  செனித்து இல்லற மிருந்து
  சிவபக்தர்கட்கு அமுது அனித்தூன்‌ தனை நிதம்‌
  தெரிசித்து வரு நாளினில்‌
  கார்‌ மழைக்கு ஒதுங்கிடக்‌ கணிகைகல நீர்படக்‌
  கண்டுபசரித்தனுப்ப
  காதலியறிந்து எமைத்தீண்ட வொண்ணாதெனக்‌
  காமந்துறந்திறமை போய்‌
  பாரின்‌ முது வயதுடைய தொண்டனார்‌ வசமீசனார்‌
  பாத்திரம்‌ தந்து ஒளித்து
  பக்தனே யெனதோடு தாவெனத்‌ தேடவப்‌
  பாத்திரங்‌ காணாமையால்‌
  சீர்வளர்‌ சிவகங்கை மூங்கியே சத்தியம்‌
  செய்துமே யிளமை பெற்று
  சிவசம்பு திருவடி நிழலை விட்டகலாத
 

போற்றி திரு அகவல் 108


வேதியர் போற்றும் விமலனே போற்றி
  மாது ஒரு பாகனை வணங்கினோய் போற்றி

  தில்லையில் தோன்றிய நல்லோய் போற்றி
  மல்குசீர் அப்பதி வாழ்ந்தோய் போற்றி

  வேட்கோக் குலத்தின் விளக்கமே போற்றி
  ஆட்கொளும் அரன் தனக்கு அன்பரே போற்றி

  சைவமெய்த் திருவினைச் சார்ந்தோய் போற்றி
  மெய்ந்நெறி உருவமாய் மேலினோய் போற்றி

  செய்தவ மேன்மையின் சிறப்போய் போற்றி
  பொய்கடிந்து அறநெறி போற்றினோய் போற்றி

  ஆற்றும் மனையின் அறத்தோய் போற்றி
  போற்றும் செய்கை புரிந்தோய் போற்றி

  சிவன்றாள் வணங்கும் சிரத்தோய் போற்றி
  அவன்புகழ் மறவா அரசே போற்றி

  நீற்றொளி கொண்ட நெற்றியோய் போற்றி
  பேற்றினை நல்கும் பெருந்தவ போற்றி

  கருணை நிறைந்து ஒளிர் கண்ணாய் போற்றி
  தருணம் உதவும் தயவோய் போற்றி

  சிவசிவ ஒலிகேள் செவியோய் போற்றி
  பலவினை கடந்த பாங்கோய் போற்றி

  ஈசனை நுகரும் எழிலோய் போற்றி
  மாசில் அவனை மதித்தோய் போற்றி

  வாய்மை மலரும் வாயோய் போற்றி
  தூய்மை சேர்க்கும் சுடரே போற்றி

  கடமைப் பணிசெய்யும் கரத்தோய் போற்றி
  உடைமை இதுவென்று உணர்ந்தோய் போற்றி

  ஆக்கையின் பயனை அறிந்தோய் போற்றி
  காக்கும் இறைவன் கருத்தோய் போற்றி

  பணியதன் விருப்புடைப பதத்தோய் போற்றி
  அணிசிவ நெறிகொள்ளும் அறிவினோய் போற்றி

  கலைத்தொழில் நுட்பம் கற்றோய் போற்றி
  நிலைத்த புகழின் நினைவோய் போற்றி

  அக்க மாலை யணிந்தோய்
  தக்கநெஞ்சு அரன்உரு தரித்தோய் போற்றி

  அமுதிற்கு மட்கலம் அமைத்தோய் போற்றி
  எமது தவப்பேறு இறையே போற்றி

  ஓடளித்து ஒழுகும் உத்தம போற்றி
  நாடிய உறுதியின் நம்பியே போற்றி

  அடியவர்க்கு உதவும் அருளனோய் போற்றி
  அடியருள் முதல்வராய் அமர்ந்தோய் போற்றி

  சீலமார் கொள்கையில் திளைத்தோய் போற்றி
  ஞாலமே உய்வழி நாட்டினோய் போற்றி

  செப்பும் ஓர் மந்திரத்து ஒளிவினோய் போற்றி
  அப்பெயர் வழங்கல் ஆனோய் போற்றி

  இரத்தினா சலைத்துணை ஏற்றோய் போற்றி
  திருத்திய ஆணையின் சிந்தையோய் போற்றி

  யாண்டும் நிறைந்தவர்க்கு இனியோய் போற்றி
  வேண்டிய பணிதனை விரும்பினோய் போற்றி

  மனித மாயையை மாற்றினோய் போற்றி
  புனித ஆணையின் பொலிவினோய் போற்றி

  ஐம்புலம் வென்ற ஆண்மையோய் போற்றி
  தன்பயன் கருதாத் தன்மையோய் போற்றி

  இல்லறத் துறவியாய் இலங்கினோய் போற்றி
  நல்லறக் தொண்டினை நாடினோய் போற்றி

  கற்பின் மிக்கார் கணவனே போற்றி
  பொற்பின் இறைவனைப் புகழ்வோய் போற்றி

  சித்த சுத்தியின் செல்வமே போற்றி
  பத்திப் பெருக்கின் பாங்கோய் போற்றி

  மூப்பிலும் அயர்விலா மூர்த்தியே போற்றி
  ஏற்பவர்க்கு அளிக்கும் இயல்பினோய் போற்றி

  மாசிவன் நடைகொளும் மனையோய் போற்றி
  காசினி புகழ்சிவக் கனியே போற்றி

  தொண்டர்என அரன்தனைத் துதித்தோய் போற்றி
  அண்டர்கள் போற்றும் ஐயனே போற்றி

  மாய ஓடு ஏற்று வைத்தோய் போற்றி
  மாயமாய் அதுசெல வருந்தினோய் போற்றி

  கண்ணுற்று ஈசனால் களித்தோய் போற்றி
  எண்ணிய உவகையால் ஏத்தினோய் போற்றி

  முறைமையில் பூசைசெய் முனியே போற்றி
  நிறைபெரு விருப்பொடு நின்றோய் போற்றி

  ஈசன் முனிவுகொள் இலக்கோய் போற்றி
  நேசம் நிறைந்த நீதியோய் போற்றி

  மறையவர் மெச்சும் மணியே போற்றி
  நிறையவர் எனப்புகழ் நெறியோய் போற்றி

  செய்சிவன் செய்கையில் சிக்கினோய் போற்றி
  உய்யுமாறு அருள்பெற்று உவந்தோய் போற்றி

  சென்னியால் வணங்கிய தெளிவினோய் போற்றி
  பொன்னெனும் மொழிகள் புகன்றோய் போற்றி

  சொல்தவ றாதுஉள தூய்மையோய் போற்றி
  நற்றவத் தோர்தொழும் நலத்தோய் போற்றி

  அந்தணர் சபைதனை அடைந்தோய் போற்றி
  செந்தண்மை யாளர்சொல் செல்வோய் போற்றி

  பொருந்திய உறுதிசொல் புதுமையோய் போற்றி
  பெருந்தவ மேன்மையின் பெற்றியோய் போற்றி

  திருப்புலீச் சுரந்தனைச் சேர்ந்தோய் போற்றி
  அருள்பயன் அடைந்த அண்ணலே போற்றி

  நனைமலர்ச் சோலை நண்ணினோய் போற்றி
  புனைசிவன் உறையும் புத்தியோய் போற்றி

  உமாபதி ஆணை உய்த்தோய் போற்றி
  இமாலயப் புகழின் எளிமையோய் போற்றி

  தண்டினைப் பற்றிய தகைமையோய் போற்றி
  பண்டுதம் செய்கை பகர்ந்தோய் போற்றி

  வாவியின் மூழ்குமா மணியே போற்றி
  மேவிய இளமையின் மெய்யரே போற்றி

  மறைச்சிவன் காட்சிகாண் மாண்போய் போற்றி
  பெறற்கு அரும் பேறு பெற்றோய் போற்றி

  விண்ணவர் மலர்பொழி மேனியோய் போற்றி
  கண்என மிளிரும் கவினோய் போற்றி

  உலகுஇருள் நீக்குபேர் ஒளியே போற்றி
  அலகில் பெருமையின் அமுதமே போற்றி

  அணிதிகழ் உலகுகாண் அற்புத போற்றி
  துணையுடன் சிவபதம் தொடர்ந்தோய் போற்றி

  திறலுடைச் செய்கை செய்தோய் போற்றி
  விறலுடைத் தொண்டராம் விளைவினோய் போற்றி

  குருவாய் விளங்கும் கோதிலோய் போற்றி
  திருநீல கண்டத் தியாகரே போற்றி

  போற்றி புவிபுகழ் புனிதரே போற்றி
  போற்றி போற்றிநின் பொற்கழல் போற்றியே.


வரலாறு


  திருநீலகண்ட நாயனார் வரலாறு

  கன்னிமார் வரலாறு

  24 நாடுகளும் இணைநாடுகளும்

  குலதெய்வங்கள்‌ என்றால்‌ என்ன ?


திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது நூல்களில் உள்ள செய்தி. "திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை “சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால் ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால் வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான் தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” - திருத்தொண்டர் திருவந்தாதி

சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவருக்கு அருந்ததியைப் போன்று கற்பிற் சிறந்த அமைந்தார். அவரிடம் ஓர் பலவீனமும் இருந்தது இளமை தூர்ந்த அவர் இன்பத்துறையில் எளியராயினமையே அது. அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மானத்தால் நொந்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவுறச் செய்து உடனுறைவுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரது புலவியைத் தீர்ததற் பொருட்டு அருகணைத்து வேண்டும் இரப்புரைகளைக் கூறித் தீண்டுவதற்குச் சென்றார். உடனே "எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்" என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி எம்மை எனச் சொன்னமையால் "எம் மாதரையும் தீண்டேன்" உறுதி கொண்டார். இளமை மிக்க நாயனாரும், மனைவியாரும் உடனுறைவின்றி வேறு வேறாக தம் மனையிலே (வீட்டிலே) வாழ்ந்தனர். தமது இவ்வொழுக்கத்தை அயலறியா வண்ணம் பேணி நடந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல இளமை நீங்கி முதுமையெய்தினார். முதுமையெய்தி உடல் தளர்ந்த நிலையிலும் திருநீலகண்டத்திலும் கொண்ட பற்றுதியும் தம் உறுதி தவறாது ஒழுகினார். இவர் தம் செயற்கருஞ்செயலை உலகத்தவர்களுக்கு விளக்கம் செய்ய இறைவர் திருவுளம் பற்றினார். ஒரு சிவயோகியார் வேடம் பூண்டு நாயனரது மனைக்கு எழுந்தருளினார். நாயானார் அவரை எதிர்கொண்டு வணங்கி முறைபப்டி பூசனை செய்து "அடியேன் செய்யும் பணி யாது?" என இரந்து நின்றார். சிவயோக்கியார் தம்மிடமிருந்த ஓட்டினை அன்பரிடம் கொடுத்து "இத்திருவோடு ஒப்பற்றது இதனைப் பாதுகாப்பாக வைத்து நாம் வேண்டும் போது தருக" எனக் கூறிச் சென்றார். பல நாட் சென்ற பின்னர் ஓட்டினை வைத்த இடத்தில் இராத வண்ணம் மாயஞ்செய்து விட்டுச் சிவயோகியார் மீண்டும் வந்தார். வந்த சிவயோகியாரை வரவேற்று பூசனை செய்து பணிந்து நின்ற நாயனாரிடம் "யான் முன்பு உன்னிடம் தந்த ஓட்டினைத் தருக" எனக் கேட்டார். திருநீலகண்டர் வைத்த இடத்தில் எடுப்பதற்காகச் விரைந்து சென்றார். அங்கே ஓட்டினைக் காணாது திகைத்தார். அங்கு நின்றவரிடம் கேட்டும் எங்கும் தேடியும் காணதவராய் யாது செய்வதென்றறியாமல் அயர்ந்து அங்கேயே நின்றார். சிவயோகியார் "நொடிப்பொழுதில் எடுத்து வருவதாகச் சென்றீர்; யாது செய்கின்றீர்" என அழைத்தும்; அருகே வந்து கைதொழுது "சுவாமி பாதுகாப்பாக வைத்த இடத்தில் ஒட்டினைக் காணவில்லை. வேறிடந்தேடியும் அகப்படவில்லை, அந்தப் பழைய ஓட்டிற்குப் பதிலாக நல்ல புதிய ஓடு தருகிறேன். அதனை ஏற்று பிழை பொறுத்தருளுங்கள்" என இரந்து நின்றார். சிவயோகியார் "யான் தந்த மண்னோடன்றி பொன்னோடு தந்தாலும் கொள்ளேன் தந்ததையே கொண்டுவா" எனக் கூறினார். திருநீலகண்டர் "பெரியோய் தங்கள் ஓட்டைத் தரும்வழி காணேன். வேறு நல்ல ஓடு தருகிறேன் என்றாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள் இல்லை" எனக் கூறி உணர்வொடுங்கி நின்றார். புண்ணியப் பொருளாக வந்த சிவயோயார் "யான் தந்த அடைக்கலப் பொருளைக் கவர்ந்துகொண்டு, பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாது பலபல பொய்மொழிகள் கூறுகிறாய், யாவரும் காணத் திருவோட்டை வாங்காது இவ்விடம் விட்டுப் போகேன்" என்றார். அதற்குச் “சுவாமி! தேவரீரது ஒட்டை அடியேன் கவரவில்லை. இதை எப்படித்தெரிவிப்பது? சொல்லும்” என நாயனார் கூறினார். “உன் அன்பு மைந்தனைக் கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “அப்படிச் செய்வதற்கு எனக்கு மகன் இல்லையே! என் செய்வது” எனச் சிவயோகியாரை நோக்கினார் திருநீலகண்டர். “உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “நானும் என் மனைவியும் எங்களிடையேயுள்ள ஒரு சபதத்தால் கைபிடித்துச் சத்தியம் செய்ய முடியவில்லை. நான் தனியே குளத்தில் மூழ்க்கிச் சத்தியம் செய்து தருகிறேன் வாரும்” என நாயனார் அழைத்தார். “தந்த ஓட்டைத் தராமல் இருக்கிறாய்; அதனை நீ கவரவில்லை எனின் உன் மனைவியின் கைப்பிடித்து சத்தியஞ்செய்துதரவும் தயங்குகின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையிலே இவ்வழக்கினைச் சொல்லப்போகின்றேன்; நீ அங்கு வா” என அழைத்தார் சிவயோகியார். திருநீலகண்டர் அதற்கிசைந்து அவருடன் சென்றார். தில்லைவாழந்தணர் சபையை அடைந்த சிவயோகியார் “இந்தக் குயவன் யான் அடைக்கலம் வைத்த ஓட்டைத் தருகிறானில்லை. அதனை அவன் கவர்ந்துகொள்ளவில்லை என்று மனைவியின் கைப்பிடித்து சத்தியம் செய்கிறானுமில்லை” என்று தம் வழக்கினைக் கூறினார். அதுகேட்ட அந்தணர்கள் திருநீலகண்டரை நோக்கி “நீர் நிகழ்ந்ததைக் கூறும்” என்றனர். “திருவுடை அந்தணர்களே இவர் தந்த திருவோட்டை மிகப்பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். அது மருமமாய் மறைந்து விட்டது. இதுவே நிகழ்ந்தது” எனத் திருநீலகண்டர் உள்ளதைக் கூறினார். “அப்படியாயின் இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியின் கைப் பிடித்து குளத்திலே மூழ்க்சிச் சத்தியம் செய்து கொடுத்தலே முறை” எனத் தில்லைவாழந்தணர்கள் தீர்ப்பளித்தனர். அது கேட்ட திருநீலகண்டர் தம் மனைவியைத் தான் தீண்ட இயலாத சபத்தை வெளிபடுத்த முடியாதவராய். “பொருந்திய வகையால் மூழ்கித் தருகிறேன்” எனச் சொல்லி சிவயோகியாருடன் தம் வீட்டை அடைந்தார். வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். திருநீலகண்டத்தின் ஆணையினைக் காத்தற்பொருட்டு மூங்கில் தடியொன்றில் ஒரு முனையைத் தாமும் மறுமுனையை மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர். அப்பொழுது சிவயோகியார் “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக" என வற்புறுத்தினார். அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கிக் கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதக் கண்ட அனைவரும் சிவயோகியாரைக் காணாது மருண்டு நின்றனர். மறைந்த இறையவர் உமையம்மையாரோடு, வெள்ளையெருதின் மீது தோன்றி 'புலனை வென்ற பெரியோர்களே! இவ்விளமையோடு என்றும் எம்மை நீங்காதிருப்பீர்களாக" என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைபணியாற்றிச் சிவலோகமடைந்து பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பமுற்றனர்.

திருத்தொண்டர் புராணசாசனம்
தில்லைநகர் வேட்கோவர் தூர்தராகி,
தீண்டிலெமைத் திருநீல கண்டமென்று
சொல்லும் மனையாள் தனையே அன்றிமற்றும்
துடியிடையாரிடை இன்பம் துறந்து, மூத்து, அங்(கு)
எல்லையில் ஓடு இறை வைத்து, மாற்றி, நாங்கள்
எடுத்திலம் என்று இயம்பும், என இழித்து பொய்கை
மெல்லியாளுடன் மூழ்கி இளமையெய்தி
விளங்கு புலீச்சரத்தரனை மேவினாரே
நுண்பொருள்

“திருநீலகண்டம் எனும் திருமந்திரப்பெருமை திருநீலகண்டம் தீதினை அகற்றித் திருவாக்கும் திருமந்திரம் (திருஞானசம்பந்தப் பிள்ளையார் “திருநீலகண்டத் திருப்பதிகம்” அருளிச் செய்தமை காண்க. இன்பத்துறையில் எளியரான குயவனாரை புலனை வென்ற பெரியோராக்கியது இத்திருநாம மந்திரம். அயலவர் ஐயுறா வண்ணம் கருத்தொருமித்து மனையறம் நடத்திக் கொண்டே அன்புறுபுணர்ச்சியின்றி வாழ்ந்ததும், முதுமையிலும் இவ்விரதம் காத்ததும் தமக்கு நேர்ந்த பழியினின்று நீங்குவதற்கு மனைவியின் கைபிடித்துக் குளத்தில் மூழ்கும் முறை வந்தவிடத்தும் கைதீண்டாது மற்றோர் முறையால் மூழ்கியதும், தம் கூடா ஒழுக்கத்தை உலகறியச் சொல்ல நேரிட்டபோதும் விரதம் காத்ததும் ஆதிய இவையெல்லாம் திருநீலகண்டம் எனும் இத்திருமந்திரத்தின் ஆற்றல் விளைந்தனவே. இத்திருமந்திரத்தைக் துணைகொள்ளின் எத்தகைய விரத்தைக் கைகொள்ளலும் அதனைக் காத்தலும் எளிதே மன்றுள்ளே திருக்கூத்தாடி அடியவர் மனைகள் தோறும் சென்றவர் நிலைமைகாட்டும் தேவர்கள் தேவர்தாமும் வென்ற ஐம்புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால் என்றும் இவ்விளமை நீங்காது என்றுஎழுந்தருளினீரே - பெரியபுராணம் திருநீலகண்ட நாயனாரது குருபூசை நாள் தை விசாகம்.

® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.