• முகப்பு
  • வரலாறு
    • திருநீலகண்ட நாயனார்
    • 7 கன்னிமார்கள்
    • 24 நாடுகள், இணைநாடுகள்
    • குலதெய்வம்‌ என்றால்‌ என்ன ?
  • பூஜைகள்
  • நிர்வாகம்
  • புகைப்படம்
  • ஆன்மீகம்
  • இருப்பிடம்

அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில்




வரலாறு


  இராசாக்கள் சுவாமி வரலாறு
  திருநீலகண்ட நாயனார் வரலாறு
  கன்னிமார் வரலாறு
  24 நாடுகளும் இணைநாடுகளும்
  குலதெய்வங்கள்‌ என்றால்‌ என்ன ?



மகா கும்பாபிஷேக நாள்


  1. ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாதம் 19-ஆம்  நாள் சித்திரபானு வருடம் 2002-ஆம் ஆண்டு (02-June)
  2. புதன்கிழமை மாசி மாதம் 28-ஆம் நாள் விஜய வருடம்  2014-ஆம் ஆண்டு (12-March)
 

பெரும் பொங்கல் விழா


  1. ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 28-ஆம்  நாள் சுபானு வருடம் 2003-ஆம் ஆண்டு (11-May)
  2. ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 28-ஆம்  நாள் சுபானு வருடம் 2015-ஆம் ஆண்டு (11-May)
 

குறள்வெண்பா


  அருட்காஞ்சிக்‌ கோயில்‌ நாடென்று தொழுவார்‌ இருட்பாடு நீக்கியிருப்‌ பார்‌.


அருள்மிகு இராசாக்கள்!


  இராசா ! இராசா ! எனச் சொல்லி
  சிந்தையில் நிறுத்தும்போது
  அவன் கருணையே அங்கே
  அளவின்றிப் பொழியக்கூடும் !
  முகம் ஒளியாய் மின்னும்
  மோகமுள் வலியும் போகும் !
  சுபம் சபமே நித்தம்
  சூழ்நிலை எங்கும் காணும் !
  மனதிலே இராசாக்களைப் பூட்டி
  மந்திரத்தால் அவனைக் கட்டி
  சினந்தனைச் சீவித் தள்ளி
  சிரித்த முகத்தைக் காட்டி
  நினைவிலே இராசா ! இராசா ! என்றே
  நினைக்கிற பழக்கம் தன்னை
  கணந்தோறும் செய்து வந்தால்
  காலமே கைகட்டி நிற்கும் !
  உருவமாய் உள்ள ஒன்றை
  உள்ளத்தில் இராசாவாய் கொண்டு
  கருமமாய் இராசா ! இராசா ! என்று
  காலமும் சொல்லிவந்தால்
  உருவமே இராசாக்களாகி
  உள்ளுக்குள் ஆட்சி செய்யும்
  தருமமே துணையாய் நின்று
  தவமே நல்வாழ்வு மாகும் !
  கத்தியை வலக்கையில் வைத்து!
  கேடயத்தை இடக்கையில் வைத்து
  பாரினைக் காலின் கீழே
  பாந்தமாய்க் காத்து நிற்கும்
  ஈசனாம் சிவஇராசாக்களின் நாமம்
  சிந்தை செய்யச் செய்ய
  வாசமாய் மாறும் வாழ்க்கை
  வணங்குவாய் இராசா என்ற நெஞ்சே !
  இராசா நகரமர்ந் துறையும்
  இராசாக்கா உன் குடிகள்
  வளர்ந்தோங்க வணங்குகிறோம் !
  வரம் தருவாய் மனம் உருகி
  நெஞ்சம் கசிந்துருகி வேண்டுகிறோம்
  நெஞ்சினினே குடி கொள்வாய் !
  குலந்தழைக்க ! குலக்கொழுந்தே !


தனிப்பாடல்‌


  பாரியூர்‌, காஞ்சிக்‌ கோயில்‌
  பண்பான கவுந்தப்‌ பாடி
  கூரியர்க்‌ கூகலூரும்‌
  குணமுறு முடச்சூர்‌ இன்னும்‌
  ஆரியர்‌ அமுக்கொளிப்‌ பின்‌
  அழகிய அயிலூர்‌, ஆகிப்‌
  பேர்பெறும்‌ பெருந்தலையூர்‌
  பெரும்புலி யூரைக்‌ காண்மின்‌
  களங்கயம்‌ ஒளிர்‌ தாளுன்றி
  குளப்பலூர்‌ என்று கண்டு
  விளங்கு விக்ரம சோழபுரமும்‌
  மேவுவர்‌ கொங்கு நாட்டில்‌
  வளங்களே விளைக்கும்‌ வல்ல
  வேளாளர்‌ புகழைப்‌ பாடி
  உளங்களே மகிழ்‌ ரென்பேன்‌
  உத்தமத்‌ தமிழி னாலே!


"கோடி நன்மை தரும் குலதெய்வ வழிபாடு"

வரலாறு

கொங்கு நாடு - இதனை ஆராயுங்கால் பெரும்புலவர் திரு. புலவர். வே.ரா. தெய்வசிகாமணி அவர்கள் கொங்கு நாடு “கொங்கு” என்னும் தலைநகரத்தால் வந்தது என்பார். சான்றாக தாராபுரம் வட்டத்தில் “கொங்கர்' என்ற ஊர் இன்றும் உள்ளது என்று உதாரணத்தையும் காட்டுகிறார். புலவர் குழந்தை அவர்கள் பூ நாடு, மண நாடு, தேன் நாடு என்று மூன்றையும் உள்ளடக்கி இருப்பதால் கொங்குநாடு என பெயர் வந்தது என்று கூறுகிறார். கொங்கர் இன மக்கள் வாழ்ந்த நாடே “கொங்குநாடு” என்பதே பொருந்தும். இதற்குச் சான்றாக சங்ககால புறப்பாடல்களில் “கொங்காணங்கிழான்" என்ற பெயர் உள்ளது என்பதைக் கூறலாம். கொங்கு நாடு 24 நாடுகளாக குறுநில மன்னர்களின் ஆளுகைக்குள் இருந்தது. நீலமலை (நீலகிரி) கோவை, சேலம், ஈரோடு, கரூர்,தர்மபுரி, திண்டுக்கல் அடங்கிய பகுதியே கொங்கு நாடு எனலாம். (24 நாடுகளில் பெயர்கள் தனியே கொடுக்கப்பட்டுள்ளன) காஞ்சிக்கோயில் நாடு என்கின்ற காஞ்சிக் கூவல் நாடு
கொங்கு நாட்டில் வரலாற்றுச் சிறப்புடைய நாடாகக் காஞ்சிக்கூவல் நாடு விளங்குகிறது. காஞ்சிக்கூவல் என்பது காஞ்சிக்கோயில் நாடு என்றாகியது. இலக்கிய படைப்பில்

“நிதம் இல்லறம் வளர்த்து உதவி மல்கு காஞ்சிக்கோயில்”
“அருள் பெருகு காஞ்சி"

- என்று புகழுடைய நாடாக இருக்கிறது.

கொங்கு நாடு 24 நாடுகளைக் கொண்டதாக இருப்பினும் குறுநில மன்னர்கள், சேர, சோழ, பாண்டியர் போன்ற போரசர்களுக்கு மானியம் (கப்பம்) செலுத்தி அரசாண்டு உள்ளனர் என சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். போரசர்களைப் புகழ்ந்து பாடிய பெரும்புலவர்கள் அவர்கள் கீழ் உள்ள குறுநில மன்னர்களைப் பாடாது விட்டு விட்டார்கள்.
பல கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் காலத்தால் அழிந்தது.
பல கோயில்கள் அன்னியர் படை எடுப்பால் நிலை மாறியது. ஆனால் கி.பி.1 முதல் 350 வரை கொங்கு நாட்டை கொங்கு மக்களின் தலைவர்கள், மன்னர்கள் ஆண்டு வந்தனர் என்று புறநானூறு, குறுந்தொகை கூறுகின்றது. அக்காலத்தில் இந்து மதத்திற்கு எதிராக கி.பி. 4, 5-ஆம் நூற்றாண்டில் பெளத்த சமயம் பரவ தொடங்கியது.
அது காஞ்சிக்கோயிலையும் விட்டு வைக்கவில்லை.அந்நிலையில் காஞ்சிக்கோயில் நாட்டை ஆண்டுவந்த மன்னர் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வதோடு, அவரை எவவாறு குலதெய்வமாகப் போற்றி வழிபட்டார்கள் என்பதையும் அறிவோம். கொங்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் இராசாக்கள் சுவாமி திருக்கோயில்கள் காணப்படுகிறது.

இராசாக்கள் சுவாமி உருவானவிதம்

இராசாக்கள் சுவாமியின் வரலாறு அறியுமுன்பு காஞ்சிகோயிலில் இராசாக்கள் சுவாமி திருக்கோயில் இருந்ததாகவும், அது ஊர்ப்பொதுமக்கள் அனைவர்க்கும் உரியதாக இருந்தது என அறிய வேண்டும். வேட்கோவர் என்ற குயவர்கள் இராசா அவர்களுக்குச் செய்த உதவியையும், இராசா குயவர்களுக்கு செய்த பேருதவிகளை நினைவு கூறவும், நன்றி தெரிவிக்கவும், இராசாக்கள் சுவாமி சிலையையும், இராணி முத்தாயி சிலையையும் நிருவி (பிரதிஷ்டை) தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர்.

"மாவீரர் மன்னர் தர்மராஜா வரலாறு"

சங்ககாலத்தில் காஞ்சிக் கோயிலை ஆண்ட மன்னன் காசி ராச என்கிற தர்மராஜா ஒருவர். அவர் குறுநில மன்னர்களில் மிக்க வீரமும், தான தருமம் செய்வதிலும் சிறந்தவர். வாரி வழங்குவதில் வள்ளல். சிவபெருமான் மீது நிறைந்த பக்தி உடையவர். தமது அரண்மனையில் பெண் தெய்வமாகிய அருள்மிகு முத்தாயி அம்மனை கோயில் கட்டி வழிபட்டு வந்தார். காசி மன்னர் உடல் முழுதும் வெம்மை கொப்புளங்கள் தோன்றின. (அதனை அக்கி என்பர்) அதனால் மன்னர் உடல் நலம் குன்றி துயர் உற்றார். உடல் தளர்வும் ஆயிற்று. அரண்மனை வைத்தியர்களும் மற்றும் பக்கத்து நாட்டு சிறந்த வைத்தியர்களும் வந்து பல வித வைத்தியம், மருந்து, மந்திரம் செய்தும் பலன் அளிக்கவில்லை. மன்னர் மனம் உடைந்து படுத்த படுக்கை ஆனார், மக்களும் வருந்தினர்.

ஒரு நாள் அமைச்சர் பெருமகனார் மன்னரிடம் சென்று அரசே குயவர் ஒருவர் அக்கி கொப்புளத்திற்கு மண் வைத்தியம் செய்கிறாராம். இம்மாதிரி நோய்கள் எளிதாக விரைவாக குணமாவதாக அறிகிறேன். தங்களின் ஆணை கிடைத்தால் தக்க ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். “நாளை காலை அந்த குயவர் வீட்டிற்கு நாம் செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார். மறுநாள் அதிகாலை கதிரவன் உதிக்கும் வேளையில் காசிராசாவை இரதத்தில் வைத்து குயவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். தேர் குயவர் குடிசைக்கு முன்பு வந்து நிற்பதைக் கண்ட குயவர் செய்வதறியாது திகைத்து நின்றார். அமைச்சர் தாங்கள் வந்த காரணத்தை குயவரிடம் விவரித்து அவரது அச்சத்தையும், திகைப்பையும் போக்கினர். குயவர், மன்னரை ஈர மணல் மீது வாழை இலைகளை விரித்து வைத்து, (தன் வீட்டு வாசலில்) அதன்மீது படுக்க வைத்தார். குயவர் தங்களது குல இஷ்ட தெய்வமாம் திருநீலகண்டேசுவரரை மனத்தில் நினைத்து ஸ்ரீ தன்வந்திரி மந்திரத்தையும், எதிரிகள் சாபம் நீங்க ஸ்ரீ சுதர்சன மந்திரத்தையும் ஓதி, தங்கள் பரம்பரை நாட்டு வைத்தியமாம் காவிக்கல்லும் (காவி மண்ணும்), குறு மிளகும், வெற்றிலையும் சேர்த்து சாந்து செய்து கோழி இறகினால் மன்னன் முதுகில் சூரியன் முகம் வரைந்து, சூரிய நமஸ்காரம் செய்து தன் வைத்தியத்தை, தொடர்ந்து அக்கி என்னும் கொப்புளங்கள் மீது (கேருமருந்து) பூசினார். இரண்டாம் நாள் சக்தி வழிபாட்டின் அடையாளமாக மன்னன் முதுகில் சிங் கமும் வரைந்து மருந்து பூசினார். மூன்றாம் நாளும் மருந்து பூசவே சிறிது சிறிதாக நோயின் வெம்மையின் கொடுமை குறைந்தது. சிறிது நாளில் பூரண குணம் அடைந்தார். மன்னரும், அரசு அதிகாரிகளும், நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மகிழ்வு அடைந்த மன்னன் குயவரை அழைத்து அவருக்கு வேண்டிய நிலம் பொன் பொருள் தானமாக கொடுத்து சிறப்பு செய்ய சொன்னதாகவும், வைத்தியத்துக்கு பிரதிபலனாக இனாம், பொன் பொருள் பெறுதல் பாவம் என்றும், கூறி மறுத்துவிட்டார். மன்னர் விரும்பினால் பிணி அகற்றி அருள்புரிந்த அருள்பிகு திருநீலகண்டேசுவரருக்கு, அன்னை அன்னபூரணி . அம்மை இருவருக்கும் காஞ்சிக்கோயிலில் கோயில் அமைத்துக் கொடுத்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் கூறினார். மன்னர் வியந்து போனார். குயவனாரின் கோரிக்கை நிறைவேறியது. எதிரிகள் தொல்லை ஒழிந்து, உடல் நலம் பெற்ற மன்னர், குயவர் இனத்தவர்களை கிராமத்தில் வரிவசூல் செய்யும் காணியாளர்களாகவும், கிராம நிருவாக அதிகாரிகளாகவும், அரண்மனையில் அமைச்சர்களாகவும், ஏனைய கிராமக் கோயில்களில் அர்ச்சகர்களாகவும் (பூசாரிகளாகவும்) நியமித்தார். அவர்களுக்கு விவசாய நிலங்கள் இனாமாக வழங்கினார். இவ்வாறு பல்வேறு வகைகளில் குயவர் இன மக்களுக்கு தானங்கள் செய்த மன்னனை தர்மராஜா என்று அழைத்தனர். தங்கள் குயவர் குலத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலயம் அமைத்துக் அரண்மனையில் மரியாதையுடன் அனைத்து பதவிகளில் பணிபுரிய கொடுத்து உதவிய தருமராஜாவான காஞ்சிக்கோயில் நாட்டு காசி ராஜனை குயவர்கள் தங்கள் குலத்தை வாழவைத்தமைக்கு நன்றிகடனாக இராசாக்கள் கோயில்கட்டடி, அவரது உருவச்சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார்கள்.

தருமராஜா கோயில் ஊர்ப்பொதுக் கோயிலாக மாறியது, காலங்கள் செல்ல செல்ல பல மாற்றங்கள் அடைந்தது. காஞ்சியை மையமாகக்‌ கொண்ட குலாலர்கள்‌ (குயவர்கள்‌) ஐம்பொன்னில்‌ அரசனின்‌ உருவத்தை வடித்து, அரசியை முத்தாய்‌ அம்மனாக வார்த்து, விநாயகர்‌ மற்றும்‌ கன்னிமார்களை இணைத்து வழிபட்டு வந்தனர்‌. குலாலர்கள்‌ காஞ்சிக்கோயிலிலிருந்து இடம்‌ பெயர்ந்து பல்வேறு திசைகளில்‌ சென்று பல ஊர்களில்‌ வாழ்ந்தாலும்‌ காஞ்சிக்கோயில்‌ நாட்டவர்‌ என்ற பெருமையை விடவில்லை. இன்றளவும்‌ காஞ்சிக்கோயில்‌ நாட்டுக்காரர்கள்‌ என்றே அவர்கள்‌ தங்களை அமைத்துக்கொள்கின்றனர்‌. அதே அமைப்பில்தான் இன்றும் இராசாக்கள் சுவாமிக்கு கிரீடமும், நகைகளும், வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும், இடது பக்க இடையில் குறுவாளும் உள்ள உருவம் அமைக்கப்பட்டது.

"பூஜை செய்பவர் நியமித்தல்"

இருநூறு ஆண்டுகளுக்குள்‌ ஏற்பட்ட மாற்றங்களையே வரிசைப்படுதத கூறமுடிகிறது. முக்கிய பிரிவாகிய காஞ்சிக்கோயில்‌ நாட்டவாகள தங்களுக்குள்‌ பூசாரிகளை ஏற்படுத்தி சில கட்டுப்பாடுகளையும்‌ அமைத்து வழிபட்டனர்‌. சத்தியமங்கலம்‌, நஞ்சகவுண்டன்பாளையம்‌, மேட்டுப்பாளையம்‌, பெத்தாம்பாளையம்‌, காஞ்சிக்கோயில்‌ ஆகிய இடங்களில்‌ பூசாரியார்களை காஞ்சிக்கோயில்‌ நாட்டைச்‌ சேர்ந்தவர்கள்‌ ஏற்படுத்திக்‌ கொண்டு பூஜை முறைகளை செய்து வந்தனர்‌. பெரிய பூசாரி, சின்ன பூசாரி, பெரியதனம்‌, உக்ரானம்‌, கரகமாடி, கணக்குப்பிள்ளை என்பவர்களை நியமித்து, இந்த ஆறு பேரும்‌ அதிகாரங்கள்‌ என அழைக்கப்பட்டனர்‌.

பூசாரியாரின்‌ மரணம்‌ அல்லது மனைவியின்‌ மரணம்‌ இரண்டும்‌ பூசாரியின்‌ கால முடிவை காட்டுவதாகும்‌. பூசாரிக்குப்பின்‌ பூஜைகள்‌ நடைபெற வேறு ஓர்‌ பூசாரியாரை நியமிப்பர்‌. மற்ற பூசாரிகள்‌ சேர்ந்து கரகம்‌ வைத்தல்‌ என்ற நிகழ்ச்சியை நடத்தி அவரை பூசாரியாக ஏற்றுக்கொள்கின்றார்கள்‌.

"முதல் நிர்வாகம்"

திரு. பெ.கு. அய்யாவு M.A., M.Ed., அவர்களை தலைவராகவும் திரு. P.K. பழனிச்சாமி அவர்களை செயலராகவும்‌, திரு. S. ராஜன்‌ M.A., M.Ed., அவர்களை பொருளாளராகக்‌ கொண்டு குழுவைத்‌ தேர்ந்தெடுத்தார்கள்‌. அவர்களது கடின உழைப்பால்‌ பூசாரியார்களையும்‌, குடிகளையும்‌ ஒன்று திரட்டி வரிவசூல்‌ செய்தனர்‌. ஆண்டுகள்‌ செல்லச்செல்ல கூட்டமும் அதிகரித்தது. சுவாமி சிலைகளை வருடம்‌ ஓர்‌ பூசாரியார்‌ பராமரித்து பூஜை செய்தனர். ஒவ்வொரு சித்திரை முதல்‌ நாளில்‌ சிறப்பு பூஜையும்‌ மக்கள் கூட்டமும்‌ கூட்டி சிலை பரிமாற்றம்‌ நடைபெற்றது. அனைவரும் பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு அம்சமாகும்‌.

"உற்சவ மூர்த்திகள்"

உற்சவ மூர்த்திகளுக்கு எல்லா இடங்களிலும்‌ பூஜை, ஆராதனைகள்‌ சிறப்பாக நடந்து வருகிறது. நிலையான ஓர்‌ ஆலயம்‌ வேண்டும்‌ அதில்‌ இராசாக்களை வைத்து வழிபட வேண்டும்‌ என்ற எண்ணம்‌ எல்லாரிடமும்‌ இருந்தது. பெருந்துறையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில்‌ பெத்தாம்பாளையம்‌ ரோட்டில்‌ 52 செண்டு இடத்தல் 8 பூசாரிகளுக்கும்‌ பொதுவாக 15.12.1999ல்‌ கிரயம்‌ செய்தனர்‌. 26.1.2000ல்‌ பூமிபூஜை போட்டு கோயில்‌ கட்ட ஆரம்பித்தனர்‌. வரி வைத்து வசூல்‌ செய்தனர்‌, நன்கொடையும்‌ பெற்று கோயில்‌ எழுப்பினர்‌. 2.6.2002 திருக்கோயில்‌ மகா கும்பாபிசேகத்தைச்‌ சிறப்புற அமைத்தனர்‌. ஆலயத்திற்கு உற்சவமூர்த்திகள்‌ விசேஷச நாட்களில் பூஜைகளும்‌ சிறப்புற நடைபெறும்‌. பால்கு 1982-ல்‌ தொல்பொருள்‌ துறையில்‌ பதிவு செய்து சான்றுகள்‌ உற்சவமூர்த்திகளின்‌ தெய்வீக உணர்வை பார்ப்போரிடம்‌ உருவாக்கும்‌ தன்மை பெற்றதாக உள்ளது.

"கோயில் மூலவர்"

கோயிலில் மூலவர் இராஜ கிரீடமும், வலது கையில் வீர வாளும், இடது கையில் கேடயமும், இடது பக்க இடையில் (இடுப்பில்) குறுவாளும் வைத்திருக்கும் குலதெய்வ வழிபாட்டின் தன்மையை விளக்கும் முகத்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் கல் சிலையாக சக்தி விநாயகரும், நுழைவாயிலின் வலது பக்கம் வழிபாட்டு முகூர்த்த விநாயகரும், இடது பக்கம் காவல்தெய்வம் கருப்பராயனும் உள்ள பகுதியில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையோடு காட்சிதருகிறார். மணிமண்டபத்தில் வலதுபக்கம் விநாயகரும், இடதுபக்கம் ராணி முத்தாய் அம்மனும், தென்பகுதியில் கன்னிமார்களும், தனி சந்ததியாக வெளியே குயவர் இனத்தவர் என எடுத்துக்காட்ட குலமாணிக்கங்களாக சிவநெறி போற்றி வாழ்ந்த திருநீலகண்ட நாயனார், அவர் மனைவி இரத்தினசாலா அம்மையாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

"மகா கும்பாபிஷேகம்"

மேற்கண்ட மூர்த்திகளுக்கு ஆகம விதிப்படி மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாதம் 19-ஆம் நாள் சித்திரபானு வருடம் 2002-ஆம் ஆண்டு (02-June) அன்று நடைபெற்றது. அன்று முதல் காஞ்சிஒடுவங்க நாடு (காஞ்சிக்கோயில் நாடு) குலாலர் குலதெய்வம் அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயிலை மக்கள் அனைவரும் விரும்பி வந்து வழிபட்டு மகிழ்வோடு செல்கின்றனர்.

"குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு"


® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.