• முகப்பு
  • வரலாறு
    • திருநீலகண்ட நாயனார்
    • 7 கன்னிமார்கள்
    • 24 நாடுகள், இணைநாடுகள்
    • குலதெய்வம்‌ என்றால்‌ என்ன ?
  • பூஜைகள்
  • நிர்வாகம்
  • புகைப்படம்
  • ஆன்மீகம்
  • இருப்பிடம்

அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் - ஆன்மீக தகவல்கள்

குல தெய்வம் என்றால் என்ன ?

நம் முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டார்களோ அதுவே நமக்கும் குல தெய்வம் ஆகும். இந்த குல தெய்வத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் யாருக்கு இந்த குல தெய்வம் மாறும் தெரியுமா ?
பெண்களுக்கு குல தெய்வம் மாறும். திருமணத்திற்கு முன் தந்தை வீட்டு குலதெய்வத்தை வழிபடுவர். திருமணத்திற்கு பிறகு கணவன் வீட்டு குல தெய்வத்தை வழிபடுவர்.

குல தெய்வ வழிபாடு அவசியமா ?

கண்டிப்பாக குலதெய்வ வழிபாடு அவசியம். ஒரு குலம் விருத்தி அடைய வேண்டும் என்றால் குல தெய்வ வழிபாடு முக்கியம். நம் முன்னோர்கள் காலத்தில் மறைந்த முன்னோர்களை குல தெய்வமாக ஏற்று வழிபட ஆரம்பித்தனர். நம் முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக வழிபடுவார்களோ அதுவே நமக்கும் குல தெய்வம்.

"குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு"

குலதெய்வ வழிபாடு எப்போது செய்ய வேண்டும் ?

குல தெய்வதை நாம் தினமும் பூஜை செய்யும் முன் நினைத்து வழிபட வேண்டும். அதேபோல் நம் வீட்டில் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நல்ல விஷேசம் நடந்தாலும் முதலில் குலதெய்வதை வணங்கி அந்த செயலை தொடங்க வேண்டும்.

விழுந்து கும்பிடுவதில் ஆண் – பெண்ணுக்கு வித்தியாசம் ஏன் ?

ஆண்கள் தலை முதல் கால் வரையிலான எட்டு அங்கங்களும் பூமியில் படுமாறும், பெண்கள் தலை, முகம், கை, முழங்கால், பாதம் ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் படுமாறும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனை ‘அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம்’ என்பர். பெண்மையை எவ்விதத்தி லும் துன்புறுத்தாத வழிபாடுகளை உடையது இந்து மதம்.

விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா ?

விரதத்தில் சாப்பாடு கிடையாது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு சாப்பிடாமல் இருக்கக்கூடாது.

கடவுளுக்கு முடி காணிக்கை கொடுப்பது ஏன் ?

குலதெய்வத்திற்கு செய்யப்படும் நேர்த்திகளில் முதன்மையானது முடி காணிக்கை. நீண்ட ஆயுளைப்பெறவும் குலம் தழைக்கவும் இக்காணிக்கை அவசியமானது.

வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?

மங்கலத்தின் சின்னங்களாக மாவிலை, வாழை, தென்னங்குருத்து இவை சுபநிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அலங்கரிக்கப்பட வேண்டும். இடையூறு இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற அருள் கிடைக்கும்.

அன்னதானம் செய்தால் பாவம் நீங்குமா ?

அன்னதானம் செய்தால் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும். பாவம் செய்வதற்காக எந்த தானம் செய்து கொண்டிருந்தாலும் பலனளிக்காது.

தேங்காய்‌ உடைக்கும்‌ காணம்‌ தெரியுமா ?

சாமிக்கு தேங்காயை உடைத்து படைக்கிறோம்‌. அதற்கு காரணம்‌ என்ன தெரியுமா ? நம்முடைய உயிரை ஆணவம்‌, கன்மம்‌, மாயை என்ற மூன்று மலங்கள்‌ (அழுக்குகள்‌) பற்றியிருக்கின்றன. இந்த மூன்று மலங்களிலிருந்தும்‌ நீங்கினால்‌ சித்த சுத்தி கிடைக்கும்‌; தூய்மை பெறலாம்‌. ஆண்டவனை அடையலாம்‌ என்பது சைவ சித்தாந்தம்‌. தேங்காயை மூடியிருக்கும்‌ பச்சை மட்டை மாயாமலத்தைக்‌ குறிக்கும்‌. அதையடுத்துள்ள நார்‌ கன்ம மலத்தைக்‌ குறிக்கும்‌. தேங்காயினுடைய ஓடூ ஆணவ மலத்தை குறிக்கக்கூடியது. இவை மூன்றையும்‌ நீக்கினால்‌ வெண்மையான தேங்காய்‌ தென்படுகிறது. அது சித்த சுத்தி பெற்ற ஆன்மாவைக்‌ காட்டூவதாகும்‌.

இறைவனே! மூன்று மலங்களை அகற்றி முத்திக்‌ கொடு என்று கேட்பதற்காகவே தேங்காயை உடைத்துப்‌ படைக்கிறோம்‌.

அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள்

1. தண்ணீர் அபிஷேகம் : மனசாந்தி
2. நல்லெண்ணை : பக்தி
3. சந்தனாதித் தைலம் : சுகம்
4. வாசனைத் திரவியம் : ஆயுள் வலிமை
5. மஞ்சட்பொடி : ராஜ வசியம்
6. நெய் : மோட்சம்
7. பஞ்சாமிர்தம் : தீர்க்காயுள்
8. தேன் : சங்கீத (இசை) வளமை
9. வாழைபழம் : பயிர் விருத்தி
10. மாம்பழம் : சகல வசியம்
11. பலாபழம் : உலக வசியம்
12. திராட்சைப்பழம் : பயம் நீங்குதல்
13. மாதுளம்பழம் : பகை நீக்கம்
14. தம்பரத்தம்பழம் : பூமி லாபம்
15. நாரத்தம் பழம் : நல்ல புத்தி
16. தேங்காய்த் துருவல் : அரசுரிமை
17. சர்க்கரை : பகையை அழித்தல்
18. பால் : ஆயுள் விருத்தி
19. தயிர் : சந்தான (மக்கள் விருத்தி)
20. இளநீர் : நல்ல புத்திரப் பேறு
21. கருப்பஞ்சாறு. : சாஸ்திரத் தேர்ச்சி
22. அரிசிமாப் பொடி : பிறவிப் பிணி நீங்குதல்
23. பஞ்ச கவ்யம் : ஆத்ம சுத்தி, பாவ நிவர்த்தி
24. எலுமிச்சம்பழம் : யம பயம் நீக்கும்
25. நெல்லி முள்ளிப் பொடி : நோய் நீக்கம்
26. அன்னம் : ஆயுள், ஆரோக்யம், தேசம் அபிவிருத்தி
27. பச்சைக் கற்பூரம் : பயம் நீங்குதல்
28. விபூதி : ஞானம்
29. வஸ்திரம் : ராஜயோகம்
30. புஷ்பம் : மகிழ்ச்சி
31. சந்தனம் : செல்வம், சுவர்க்கபோகம்
32. கஸ்தூரி : வெற்றி உண்டாகுதல்
33. கோரோசனை : ஜபம் சித்திக்கும்
34. வலம்புரிச் சங்கு : தீவினை நீங்கும்
35. சொர்ணம் (தங்கம்) : வைராக்யம்
36. சஹஸ்ரதாரை : லாபம்
37. கும்பம் (ஸ்நபனம்) : அஸ்வமேகயாகப் பலன்

27 நட்சத்திரக்காரர்களும் அளிக்க வேண்டிய அபிஷேகப் பொருள்கள் என்னென்ன? அதன் பலன்கள் என்ன?

27 நட்சத்திரக்காரர்களுமே விபூதியை அபிஷேகத்துக்கு அளிக்கலாம் என்பது சிறப்பு.

1. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சங்காபிஷேகம் செய்யலாம்.
2. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்னாபிஷேகம் செய்ய அன்னம் கொடுக்கலாம்.
3. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் வாங்கி தரலாம்.
4. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுகந்த தைலம் வாங்கித் தரலாம்.
5. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனுகு, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் போன்ற பரிமள திரவியங்கள் வாங்கித் தரலாம்.
6. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குங்குமப்பூ, மலர்கள் அளிக்கலாம்.
7. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேக நீரில் சேர்க்க வில்வம், தர்ப்பை வாங்கித் தரலாம்.
8. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாராபிஷேகம் செய்ய பாத்திரம் வாங்கிக் கொடுக்கலாம்.
9. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிப் பொடி வாங்கித் தரலாம்.
10. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விபூதி வாங்கித் தரலாம்.
11. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பன்னீர் கொடுக்கலாம்.
12. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கரும்புச்சாறு வாங்கி தரலாம்.
13. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழச்சாறு வாங்கி தரலாம். குறிப்பாக, எலுமிச்சை, நாரத்தம், கொழுச்சி, மாதுளம் பழச்சாறு வாங்கி தரலாம்.
14. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பசு நெய், பால், தயிர் போன்ற பஞ்சகவ்யம் வாங்கித் தரலாம்.
15. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் வாங்கித் தரலாம்.
16. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாவுப்பொடி வாங்கித் தரலாம்.
17. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பஞ்சாமிர்தம் வாங்கித் தரலாம்.
18. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மா, பலா மற்றும் வாழை போன்றவற்றால் பலாமிர்தம் வாங்கித் தரலாம்.
19. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொர்ணாபிஷேகம் செய்ய நகைகள் கொடுத்து வாங்கலாம்.
20. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணெய், அபிஷேகப்பொடி வாங்கித் தரலாம்.
21. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுகந்த திரவியங்கள் வாங்கித் தரலாம்.
22. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாம்பொடி, நெல்லிப் பொடி வாங்கித் தரலாம்.
23. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திரவியப்பொடி வாங்கித் தரலாம்.
24. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்தனம் வாங்கித் தரலாம்.
25. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்நபனம் செய்யலாம்.
ஸ்நபனம் என்பது ஐந்து வகையான புண்ணிய தீர்த்தம்.
26. ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் பொடி வாங்கித் கொடுக்கலாம்.
27. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளநீர் வாங்கி தரலாம்.

கோமுக‌ தீர்த்தம்‌ தெரியுமா ?

திருத்தலங்களில்‌ கருவறையிலிருந்து வெளியேறும்‌ வகையில்‌ வடிவமைக்கப்படிருப்பது கோமுகம்‌. இதன்‌ வழியாக வரும்‌ நீரைப்‌ பக்தர்கள்‌ புனித நீராகப்‌ பாவித்து தலையில்‌ தெளித்துக்கொள்வதை நாம்‌ கண்டிருப்போம்‌. அது அசுத்தம்‌ என்று எண்ணி சிலர்‌ அதைக்‌ கடந்துவிடுவர்‌. கருவறைத்‌ தெய்வத்‌ திருமேனிகளுக்கு செய்விக்கப்படும்‌ அபிஷேகப்பொருள்கள்‌ வழிந்து கோமுகம்‌ வழியாக வெளியேறும்‌. இதில்‌ பற்பல தேவதைகள்‌ குடியிருப்பதாகக்‌ கருதப்படுகிறது.

கங்கை, யமுனை, சரசுவதி போன்ற புண்ணிய நதிகளின்‌ பலன்களை விட இந்தக்‌ கோமுகத்‌ தீர்த்தம்‌ மகிமை வாய்ந்தது. இதைத்‌ தெளித்துக்கொண்டு புண்ணிய நதிகளே தூய்மை பெறுவதாகச்‌ சித்தர்கள்‌ கூறுகின்றனர்‌. இந்த நீரைத்‌ தெளித்துக்கொள்வதால்‌ நமது தீவினைகள்‌ ஒழிந்து மனமும்‌ உடலும்‌ தூய்மை பெறும்‌ என்பது ஐதீகம்‌.

இந்த நீரை பூஜை அறையில்‌ எப்போதும்‌ வைத்திருக்கலாம்‌. பரணி, மகம்‌ நாளில்‌ கொண்டுவரும்‌ இத்‌ தீர்த்தத்துக்குத்‌ தனிச்‌ சிறப்பு உண்டு.

பெண்களுக்கான குறிப்புகள்

1. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.

2. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.

3. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.

4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.

5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

7. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

8. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

9. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

10. வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

நந்தியெம் பெருமானின் தத்துவம் தெரியுமா ?

நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கி, நான்காம் காலான ஞானப் பாதத்தினால் பரம்பொருளை வணங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆகம நூல்கள்.

‘நந்துதல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. ‘நந்துதல்’ என்றால் மேலேறிச் செல்லுதல் எனவும் பொருளுண்டு. ஒரு யோகி பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு.

ஔவையார் கூட தனது விநாயகர் அகவலில், ‘மூலாதாரத்தின் முண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து’ எனும் வரிகள் நந்தியெம்பெருமானை நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறிச் சென்று ஈசனைக் காண வேண்டும் என்பதே இதன் முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கின்றன சைவ ஆகமங்கள்.

® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.